Monday, January 12, 2015

ஹலோ மிஸ்.. ஹலோ மிஸ்..எங்கே போனுங்க...?

என்னடா உலகம் இது? ஒரு வார இறுதியும் அதுவுமா நிம்மதியா கொஞ்சம் இருக்கலாம்னா, இந்த அலை பேசியானால் ஒரு புது பிரச்சனை.

ஒரு 30 வருஷத்திற்கு முன்னால் போன் என்பது ஒரு பெரிய விஷயம். என்னை பெற்ற ராசாத்தி எங்க அம்மா நல்லா படிச்சவங்க, ஒரு நல்ல பதவியில் இருந்தாங்க, அதனால் 70'ல் எங்க வீட்டில் போன் இருந்தது.  அந்த நம்பர் கூட ரெண்டே எண் தான்.

மாசத்திற்கு ஒரு 4 அழைப்பு வந்தாலே பெரிய காரியம். அந்த போன் அடிக்க ஆரம்பித்தால் வீட்டில் உள்ள அனைவரும் அதன் அருகே போய்  நிற்ப்போம். அம்மா அதை எடுத்து...ஹலோ...33 இந்தியா என்பார்கள்.ஒரே ஒரு ரிங் சப்தம், அம்புட்டுதேன்.

இது கருப்பு நிற போன். கிட்ட தட்ட ஒரு 15  வருஷம் வேலை செய்தது. பின்னர் என்ன ஆனது என்று மறந்து விட்டேன்.  இந்த காலத்தில் இந்த போன் காணாமல் போக வாய்ப்பே இல்லை. ஒரே இடத்தில தான் வருடக்கணக்கில் இருக்கும்.

இந்த போனின் ஒரே வேலை, மற்றவர்களிடம் பேசுவது தான். பிறகு சில நாட்களுக்கு பிறகு இந்த போனை காலையில் எங்களை எழுப்பும் அலாரமாக உபயோக படுத்தினோம்.  இதுதான் இந்த போனின் முழு நேர வேலை.

ஆனால் இந்த காலத்தில், ஒரு போன் தான் என்ன என்ன வேலை காட்டுகின்றது. ஒரே போனில் கல்குலடோரில் ஆரம்பித்து கம்ப்யூட்டர் வரை சென்றாகி விட்டது. கையில் போன் இல்லாவில் எதோ கையே இல்லாத மாதிரி ஓர் உணர்வு.

சரி, தலைப்பிற்கு வருவோம். திங்கள் முதல் வெள்ளி வரை, கையை சுற்றிய பாம்பு போல் இந்த போன் இருந்தாலும்வெள்ளி மாலையில் இந்த போனை வீட்டில் எங்கேயாவது வைத்து விடுவேன். அதோடு திங்கள் காலை தான் இது என் கைக்கு வரும். நிறைய நண்பர்கள், அது எப்படி சாத்தியம்...போன் இல்லாமல் எப்படி சமாளிகின்றாய் என்பார்கள்.

வார இறுதியில் பொதுவாக அலுவலக அழைப்புகள் இருக்காது (வேலை விஷயத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன். எங்கள் நிறுவனத்தின்  மூத்த அதிகாரி, மாலை 5 மணிக்கு அலுவலகத்தில் இருந்து எல்லாரையும் அடித்து துரத்தி விட்டு தான் வீட்டிற்கு செல்வார்). வார இறுதியின் அழைப்புகள் பொதுவாக நண்பர்களிடம் இருந்து மட்டுமே. இவர்கள் அனைவரிடமும் என் இல்லத்தின் என் இருகின்றது, அது மட்டும் இல்லாமல் மனைவி மற்றும் ராசாத்திகளின் எண்களும் உள்ளது. ஏதாவது அவசரம் என்றால் அந்த எண்களில் கூப்பிடுவார்கள். அதனால் வார இறுதியை போன் இல்லாமல் சமாளிப்பது மிக எளிது.

சென்ற வாரம் என்ன நடந்தது என்று பார்ப்போமா ?சனி காலை எழுந்து மனைவியோடு கடைக்கு செல்லலாம் என்று கிளம்பும் போது,

ஏங்க, எதுக்கும் உங்க போனை எடுத்துக்குங்க...

ஏன் ... உன் கையில் தான் இருக்கே...?

இல்ல அங்கே நிறைய வாங்க வேண்டி இருக்கு..நீங்க பாதி வாங்குக நான் பாதி வாங்குறேன்.. நடுவில் பேச தேவை பட்டால்...

சரி..

என்று சொல்லி போனை எடுத்து கொண்டேன்...

கடை வேலைகள் முடிந்த பிறகு ... ராசத்திக்களின் "கோல்ப்" போட்டி. அங்கே போட்டியில் விளையாடுபவர்களும் சரி, பார்வையாளர்களும் சரி  அலை பேசியை அமைதி படுத்தி இருக்க வேண்டும் என்ற சட்டம். அதனால் இங்கேயும் நான் போன் எடுத்து கொண்டு போகவில்லை.. "கோல்ப்" ஆட்டமும் முடிந்தது. அடுத்த நாள் கோயில் - உறவினர்கள் - நண்பர்கள் இல்லம்.

வார இறுதி முடிந்தது...திங்கள் காலை..

யாராவது என் போன் எங்கேன்னு பார்த்தீர்களா?

நீங்கள் வார இறுதியில் எப்ப அதை கையில் எடுத்திங்க..

சனி கிழமை காலையில் கடைக்கு போகையில்... பின்னர் "கோல்ப்" போட்டியில்.. பின்னர் கோயில் - உறவினர் - நண்பர்....எங்கே தவற விட்டு இருப்பேன்?

என்னங்க .. ஒரு ஆபிஸ் போன் இது. ஜாக்ரதையாக இருக்க வேண்டாமா? இவ்வளவு கவன குறைவா?

அம்மா தாயே... இது காணமல் போன கூட ஆபிசில் இவ்வளவு அறிவுரை தர மாட்டாங்க...எப்ப நான் தவறு செய்வேன் என்று காத்து இருந்து நீ அறிவுரை தர மாதிரி இருக்கு. நானே   கண்டு  பிடிச்சிகிறேன் , ஆளை  விடு  தாயே..

மனதில் .. கண்டிப்பாக அந்த  "கோல்ப்" மைதானத்தில்  உள்ள உணவகத்தில் தான் விட்டு இருப்பேன் என்று சொல்லி நேராக வண்டியை அங்கே விட்டேன்.

என் போனை சனிகிழமை இங்கே தவற விட்டேன் என்று நினைக்கின்றேன். இங்கே இருகின்றதா?

அந்த காணமல் போனதை வைக்கும் இடத்தில பார்த்து விட்டு ..

சாரி விஷ்.. இங்கே இல்லை. ஆல் தி பெஸ்ட்.

இங்கேயும் இல்லையா? எங்கே போய் இருக்கும்?

என்று யோசித்து கொண்டே வண்டியை அலுவலகத்திற்கு விட்டேன்..

அங்கே சென்று இருக்கையில் அமருகையில்.. அலுவலக போன் ரிங்கியது..

ஏங்க ... போன் கிடைத்ததா...?

ஆமா, கிடைத்து விட்டது..

எங்க இருந்தது..

நான் கொஞ்சம் முக்கியமான வேலையில் இருக்கேன்,  அப்புறமா கூப்பிடறேன்...

எங்கள் அலுவலத்தில் IT ஊழியர் வரும் வரை காத்து இருந்தேன்.. அவரும் வந்தார்...

என் போனை தவற விட்டுவிட்டேன்..

கடைசியாக எங்கே பார்த்தாய்...?

அது தெரிந்தால் தான் நானே போய் எடுத்து வருவேனே

பேசும் போது சமத்தா பேசு, ஆனா போனை கோட்டை விட்டுடு..

சரி.. ஆன்லைனில் போய் உன் விவரத்த கொடு..

அவர் சொன்ன மாதிரி செய்தேன்.

அதில் ஒரு உலக வரை படம் வந்து கடைசியில் என் போன் என் இல்லத்திற்கான விலாசத்தில் உள்ளது என்று வந்தது.

இப்போது உங்கள் வீட்டில் யாராவது இருகின்றார்களா?

இல்லை ஏன்...?

இங்கே இருந்தே அதை ரிங் செய்ய வைக்க இயலும்.. அப்போது கண்டு பிடித்து எடுத்து கொள்ளலாம்.

அந்த போன் "அமைதி படுத்த" பட்டு இருகின்றது அதனால் சத்தம் வராது.

இது எமெர்ஜென்சி ரிங், இது அதிக சத்தத்தோடு ஒலிக்கும். ஆன் செய்யட்டா ?

வேண்டாம் ...

ஏன்..
மனைவி வீட்டில் இருகின்றார்கள் .. அவர்கள் எடுத்தால் பிரச்சனை..

உன் மனைவி தானே..

ஆமா..

அதில் என்ன பிரச்சனை..?

அவர்களிடம் போன் கிடைத்தது என்று சொல்லிவிட்டேன்..

ஒ.. காண போனது என்றவுடன் அறிவுரை மழை பொழிந்ததா?

உனக்கு எப்படி தெரியும்..

அது உலகின் எல்லா கணவருக்கும் கிடைக்கும் இலவச அறிவுரை தானே..

சரி.. நான் இன்னும் சில நிமிடங்களில் வீட்டிற்கு சென்று, மனைவி இல்லாத நேரத்தில் அதை ரிங் செய்து எடுத்து கொள்கிறேன்.

தாமதிக்காமல் சீக்கிரம் செய். பாட்டரி போய் விட்டால் இந்த சத்தம் வராது.

நேராக வண்டியை வீட்டிற்கு விட்டேன்..

வீட்டின் வாசலில் அம்மணியின் வண்டி இல்லை என்பதை கண்டு ஒரு நிம்மதி பெரு  மூச்சு விட்டேன்..

கம்ப்யுடரை எடுத்து .. அதை ரிங் செய்ய வைத்து ஒவ்வொரு அறையாக அதன் சத்தத்தை தேடி அலைந்தேன்.. எங்கேயும் காணவில்லை.

வீட்டு தொலை பேசியை எடுத்து IT ஊழியரிடம்..

நான் இப்போது வீட்டில் இருந்து தான் பேசுகிறேன்.. இங்கே அந்த போன் சத்தம் வரவில்லையே...

ஒரு நிமிடம் இரு.. நான் மீண்டும் அது எங்கே இருகின்றது என்று பார்க்கின்றேன்..

விஷ்.. தற்போதைய நிலைமை படி அந்த போன் நம் ஆபிஸ் அருகே உள்ளது.. ஆனாலும் இங்கேயும் அந்த சத்தம் எதுவும் வரவில்லை.

என்னடா குழப்பமாய் இருகின்றது..என்று யோசிக்கையில்.. வீட்டு போன் மீண்டும் ரிங்கியது..

ஏங்க, போனை தேடி வீட்டிற்கு போனீங்களா ?

இல்லையே, காலையில் கிளம்பும் போது அவசரத்தில் உன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டேன் அல்லவா... அது தான் சொல்லி விட்டு போகலாம்ன்னு மீண்டும் வந்தேன்..

நினைப்பு தான் பொழப்ப கெடுத்துச்சாம்... சரி, போன் கிடைத்ததா..?

ம்ம்.. கிடை....

பொய் சொல்லாதீர்கள்.. சனி கிழமை காலையில் கடைக்கு போயிட்டு வர நேரத்தில் என் காரில் மறந்து வைத்து விட்டீர்கள். நான் கூட பார்க்க வில்லை. இப்ப இளையவளை பள்ளிக்கு அழைத்து செல்லும் நேரத்தில் திடீரென்று வண்டியில் ஒரே சத்தம்.. என்ன ஏதுன்னு பார்த்தல் உங்க போன். அதை தான் எடுத்து கொண்டு உங்களிடம் கொடுக்கலாம்னு ஆபிஸ் வந்தேன்.

ரொம்ப தேங்க்ஸ்.

ஒரு விஷயங்க,..,ஆபிஸ் விஷயத்தில் கவனமா இருக்க வேண்டியது உங்க பொறுப்பு, ஆனால் வீட்டு விஷயத்தில் இந்த சின்ன விஷயத்திற்காக பொய் சொல்லாதிங்க..

நான் எப்ப பொய் சொன்னேன் ?

போன் கிடைத்து விட்டதுன்னு சொன்னது...

அது தான் கிடைத்து விட்டதே.. அது எப்படி பொய் ஆகும் ?

இப்ப தானே கிடைத்தது.. நீங்க அப்பவே கிடைத்ததுன்னு சொன்னீங்களே ?

அப்பவே கிடைத்தது உண்மை தாம்மா .. ஆனால் அது கைக்கு வரவில்லை..

அம்புட்டுதான்...

www.visuawesome.com

நண்பர்களே,
என்னுடைய பதிவுகளும் மற்ற படைப்புகளும் www.visuawesome.comhttp://www.visuawesome.com/blog/  என்ற தளத்திற்கு மாற்ற பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த  Blog Spot  ல் அடியேன் இருக்க மாட்டேன். என் எழுத்துக்கள் தங்களுக்கு பிடித்து இருந்தால் www.visuawesome.com  என்ற தளத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர் பார்த்து..

5 comments:

 1. இதைத்தான் போட்டு வாங்கறதுன்னு சொல்றாங்க.

  ReplyDelete
 2. பிரமாதமான நகைச்சுவைப் பதிவு. வாழ்த்துக்கள்!
  சிவபாலன்

  ReplyDelete
 3. நல்ல பதில் இது..
  //"அது தான் கிடைத்து விட்டதே.. அது எப்படி பொய் ஆகும் ?"
  நல்ல timing sense..

  ReplyDelete
 4. பேசும் போது சமத்தா பேசு, ஆனா போனை கோட்டை விட்டுடு.. ஹா... ஹா...

  ReplyDelete
 5. ஹாஹா! மீசையில் மண் ஒட்டாத குறைதான்!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...