புதன், 10 டிசம்பர், 2014

அவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி - 2)

இது ஒரு தொடர்ச்சி பதிவு, சென்ற பதிவை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இங்கே வருமாறு தயவுடன் கேட்டு கொள்கிறேன். சென்ற பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

பார்த்தால்.. விமானத்தில் ஒரே கூச்சல் குழப்பம். என்ன நடந்தது..?

தேவையான வெளிச்சமும் இல்லை, முற்றுமாக இருட்டும் இல்லாமல் ரெண்டும்கெட்டான் போல் ஒரு நிலைமை. எனக்கும் அருகில் இருந்த நபர்...

ஐயையோ..."டோன்ட் ஓபன் இட்" என்று சத்தம் போட்டு கொண்டு முன் வரிசையை நோக்கி ஓட முயற்சிகையில், அங்கே வரிசையில் அமர்ந்து இருந்த பயணியின் கால் தடுக்கி விழுந்தார்.

என்ன ஆயிற்று, என்று நான் விசாரிக்கும் முன்பு தான் அந்த 6 பயணிகளில் ஒருவர் அந்த அவசர கதவை திறக்க முயன்று கொண்டு இருந்ததை பார்த்தேன்.



அருகில் இருந்த அனைவரும், கூச்சல் போட, இந்த அம்மையாரோ, தனக்கு "அவசரம்" என்று மீண்டும் தன் முழு பலத்தையும் வைத்து இழுக்க அந்த கதவும் மெதுவாக விட்டு கொடுக்க ஆரம்பித்தது.

அப்போது தான் அருகில் இருந்த அனைவருக்கும் இந்த அம்மையார் இந்த கதவை "பாத்ரூம் கதவு" என்று நினைத்துவிட்டார்கள் என்று தெரிய வந்தது.

நானும் அருகில் இருந்த சில பயணிகளும் "விட்டு கொடுத்த கதவை" மூட   கதவின் அருகே போக முயற்சி செய்தாலும் அமர்ந்து இருந்த அம்மையார்கள் சற்று சுற்றளவில் பெரியவர்களாய் இருந்ததால் அது சாத்தியமில்லாமல் போனது.

என்னதான் செய்வது என்று திகைக்கையில் விமான பணி பெண் ஒருத்தி என்ன இங்கே சத்தம் என்று கேட்டு கொண்டே வந்தவர், கதவு விட்டு கொடுப்பதை பார்த்ததும் மயங்கி விழ, அங்கே ஏற்கனவே கீழே விழுந்து கிடந்தவர் .. (பாவம் படாத இடத்தில பட்டு விட்டது போல் இருகின்றது), குய்யோ  ..முய்யோ என்று கத்த குழப்பம் இன்னும் அதிகமானது.

என்ன செய்வது என்று திகைத்து கொண்டு இருக்கையில் விமான ஓட்டுனர் .. எதோ ஒரு கதவு திறந்து இருப்பதால், காற்று அதிவேகத்தில் விமானத்தில் வர நேரும் என்றும், அனைவரும் சீட் பெல்ட் போட்டு கொண்டு பொறுமையோடு அமரும் படியும் கேட்க, அந்த கதவை திறக்க முயன்ற அம்மையாரோ ... அவசரம்.. அவசரம்... பாத்ரூம் எங்கே என்று கீழே இருந்த இரண்டு பேரையும் இன்னொரு முறை மிதித்து விட்டு ஓடினார்.

விமானம் தன் உயரத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து தரையை  நோக்கி வேகமாக வர...நானோ..

Picture Courtesy : Google

அந்த பாவி மனுஷன் அறிவியல் வாத்தியார் சொன்ன மாதிரி சினிமா பாட்டு மட்டும் பாடி கொண்டு இருந்தேன் என்றால் இந்நேரத்தில் அழகாக  கீழே நின்று இந்த விமானத்தை பார்த்து கொண்டு இருக்கலாமே... இப்போது மாட்டி கொண்டு விட்டோமே என்று நொந்து கொண்டே சன்னலை  பார்த்தேன்...

விமானம் தரையை நோக்கி போகின்றதா.. அல்லது தரை விமானத்தை நோக்கி வருகின்றதா என்று தெரியவில்லை, அவ்வளவு வேகமாக விழுந்து கொண்டு இருக்கையில் அருகில் இருந்த பயணி.. என் கையை கெட்டியாக பிடித்து கொண்டு..

எனக்கு ஒரு உதவி செய்வாயா?

அட பாவி, இந்த நேரத்தில் என்ன உதவி..?

ஒன்றும் இல்லை, இந்த விபத்தில் நான் இறந்து, நீ தப்பித்தால் என் மனைவியிடம் எனக்காக ஒரு மன்னிப்பு  கேட்க வேண்டும்.

அட பாவி.. இந்த நேரத்தில் இது தான் ரொம்ப முக்கியம் என்று சொல்லாமால் (தமிழன் ஆயிற்றே.. அடுத்தவன் வீட்டில் என்ன நடக்கின்றது என்பது  நமக்கு ரொம்ப முக்கியமாச்சே), செய்றன் சொல்லுங்க.

இல்லை,திருமணதிற்கு பிறகு எனக்கு என் செக்ரடரியையும் சேர்த்து நான்கு பெண்களோடு கள்ள தொடர்பு இருந்தது, நான் செய்த அந்த தவறுக்கு நீ தான் எனக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அவள் மன்னிப்பு கொடுத்தால் தான் என் ஆத்மா சாந்தி அடையும்.

அண்ணே எப்படி அண்ணே இவ்வளவு சமத்து?. பக்கத்து வீடு மாமிக்கு பால் வாங்கி கொடுத்தாலே எங்க வீட்டில் கண்டு பிடிச்சி மரண தண்டனை தராங்களே , நீங்க மட்டும் எப்படி இவ்வளவு   சமத்தா?

இப்ப இது தான் ரொம்ப முக்கியமா ? எனக்கு இந்த உதவி செய்ய முடியுமா ? முடியாதா ?

கண்டிப்பா மன்னிப்பு கேட்கின்றேன். ஆமா, உங்க ஆபிஸ் எங்கே இருக்கு? செகரட்டரி பெயர் சொன்னீங்கனா, அவர்களிடமும் உங்களுக்கு "பால் ஊதியாச்சின்னு" சொல்லுவேனே..

அது எல்லாம் அவசியம் இல்ல, சரி ஒரு வேளை நான் பிழைத்து உனக்கு பால் என்றால் உன் மனைவியிடம் நான் ஏதாவது மன்னிப்பு கேட்க வேண்டுமா?

அப்படியெல்லாம் உன்னை போல் பெரிய தவறு எதுவும் இல்லை, போன வாரம் அவள் பையில் இருந்த 20 டாலரை  திருடியது நான் தான் என்று சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும் ...

என்று சொல்ல, அவனோ..

இப்படி வாழ்வதற்கு நீ போய் சேரலாம் ..

என்று சொல்லுகையில் .. இருவரும் சேர்ந்து சன்னலை பார்த்தோம்... தரை கைக்கெட்டும் தூரத்தில் தெரிய.

டமால்....

தொடரும்


www.visuawesome.com

3 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...