புதன், 12 நவம்பர், 2014

நான் கவிஞனும் அல்ல. நல்ல ரசிகனும் அல்ல...


தென் கலிபோர்னியா தமிழ் சங்கம் வெளியிட்ட தீபாவளி மலரில் என் கட்டுரை...

தென் கலிபோர்னியா தமிழ் சங்கதிற்கும்  அதை சார்ந்த நண்பர்களுக்கும் என் "தீபஒளி", வாழ்த்துக்கள். "பழையவை எல்லாம் ஒழிந்தன, எல்லாம் புதிதாயின" என்ற சொல்லுக்கேற்ப, அனைவர் இல்லத்திலேயும், மனதிலேயும் வாழ்க்கையிலேயும் இருள் நீங்கி ஒளி வீசுவதாக.

நான் ஒரு பதிவாளன். பதிவாளன் என்ற வார்த்தையே ஒரு புதிய வார்த்தை அல்லவா? ஆங்கிலத்தில் இதை "Blogger" என்று அழைப்பார்கள். எங்களின் படைப்பு ஒவ்வொன்றும் ஒரு பதிவு, அதாவது "Blog".

இந்த பதிவுகளை நான் "ஆடிக்கு ஒரு முறை" எழுதி வந்த காலம் உண்டு. சென்ற வருடம் தமிழ் பதிவு உலகத்தில் நல்ல பெயர் எடுத்த நண்பர் ஒருவர், நீ எப்போதாவது எழுதுவதை நிறுத்தி விட்டு, எப்போதும் எழுது என்றார். நான்கும் கற்ற நண்பர் ஆகிற்றே. அவர் பேச்சை, மூச்சாக எடுத்துக்கொண்டு கடந்த சில மாதங்களாக தினந்தோறும் எழுதி வருகின்றேன்.

இணைய தளத்தில் நாம் எழுதும் இந்த பதிவுகள் மிகவும் வித்தியாசமானவை, விசேஷமானவை.  இவை செய்திதாள் மற்றும் பத்திரிக்கையில் எழுதுவதை விட சற்று பொறுப்பானவை. இங்கே ஒவ்வொரு பதிவரின் எழுத்துக்களும் அவரிடம் இருந்து நேராக வாசகரை போய் சேர்ந்து விடும். நம் எழுத்துக்களை படித்து, நம் கருத்துக்களை திருத்தி அனுப்ப நமக்கும் வாசகருக்கும் இடையே யாரும் இல்லை.  இதுவே எனக்கு பதிவு  உலகத்தில் மிகவும் பிடித்த  காரியம் ஆகும்.

எழுதலாம் என்று முடிவு செய்து ஆகிவிட்டது, எதை பற்றி எழுதலாம்?

பதிலும் கேள்வியிலேயே உள்ளது.  ஆம் "எதை"  பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். காலையில் 5:30 மணிக்கு தேநீரில் சக்கரைக்கு பதில் உப்பு போட்டதை பற்றி எழுதலாம். பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து கொண்டு போகையில், அவர்கள் பள்ளி நாட்களையும் நம் பள்ளி நாட்களையும் ஒப்பிட்டு எழுதலாம்.போகும் வழியில் எதிரே சத்தம் போட்டு கொண்டே வேகமாக நம்மை தாண்டி ஓடும் காவல் துறையை பற்றி எழுதலாம். சாலை விதி படி "எறும்புகள் ஊறுவதை" போல் ஒன்றன் பின் ஒன்றாக ஓடும் மற்ற வாகனங்களை பற்றி எழுதலாம். பின்னர் வேலை பற்றி, சம்பளம் பற்றி, விளையாட்டை  பற்றி, திரைப்படம் பற்றி, அரசியல் பற்றி, நமக்கு பிடித்தவர்கள் பற்றி, நமக்கு பிடிக்காதவர்கள் பற்றி ... எதை பற்றி வேண்டும் என்றாலும் எழுதலாம்.

எழுதுவதில் என்ன முக்கியம்? 


என்னை பொறுத்தவரை, தலைப்பு. ஒவ்வொரு பதிவிற்கும் அந்த தலைப்பு மிகவும் முக்கியம். ஏன் என்றால், வாசகர்களில் நிறைய பேருக்கு இந்த பதிவுகளின் தலைப்புகள் தான் கிடைக்கும். தலைப்பை பார்த்தவுடன் அந்த பதிவை படிக்க ஓடி வர வேண்டும். 

உதாரணத்திற்கு "செவ்வாயில் மங்கள்யான் - புலிவாயில் மனிதன்" என்ற தலைப்பை பார்த்ததும், வாசகர்கள் தமக்கு தெரிந்த இந்த இரு நிகழ்ச்சிகளை பற்றி இவர் என்ன சொல்ல போகின்றார் என்று அறிந்து கொள்ள வருவார்கள். 


சில மாதங்களுக்கு முன் இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்ற போது அவருக்கு சமர்ப்பிக்கும் வகையில், "மூன்றாம் பிறை - ஓர் தொடர் கதை" என்னும் தலைப்பில் மூன்றாம் பிறை படத்தை அவர் முடித்த இடத்தில் இருந்து எழுத ஆரம்பித்தேன். ஒரு தொடரை பதிவு செய்தேன், அத்தோடு முடித்து கொள்ளலாம் என்று நினைத்தேன். . ஆனால் வாசகர்களின் அன்பு கட்டளையால் இன்று 10 தொடர் வரை எழுதி முடித்து விட்டேன். இது வாசகர்களின் ஊக்கதினாலே மட்டுமே உருவானது,

இது மட்டும் அல்லாமல் பள்ளி நாட்கள்-கல்லூரி நாட்கள்- ஆரம்ப வேலை நாட்களில் நடந்த சுவராசியமான சம்பவங்களை நகைச்சுவையாக சொன்னால், அவைகள் மிகவும் அதிகமாக வரவேற்க படும்.

இப்படி எழுதுவதால் என்ன பயன்?
நாம் வாழும் நாட்டின் கலாச்சாரத்தை பற்றியும், பிள்ளைகளின் வளர்ப்பு முறை பற்றியும் மற்றும் பல  காரியங்களையும் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லும் வாய்ப்பு. அதுமட்டும் அல்லாமல் நகைச்சுவையோடு சொல்வதால் மற்றவர் முகத்தில் ஓர் சிரிப்பு. கடைசியாக உலகம் சுற்றியுள்ள தமிழ் மக்கள் நம் எழுத்தை - தமிழை வாசிக்கின்றார்கள் என்ற திருப்தி.


நீங்களும் எழுதுங்களேன்.
அன்புடன் 

விசு.

என் பதிவுகளை நீங்கள் www.visuawesome.com என்ற வலைதளத்தில் படிக்கலாம்.

14 கருத்துகள்:

  1. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்.
    அது மாதிரி, உங்கள் பதிவுகளும்..பயன்களும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா! இதில் வஞ்சக புகழ்ச்சி அணி இல்லையென்றால் தம் வார்த்தைகளுக்கு நன்றி. அந்த அணி இருந்தால், கவனித்து நடப்பேன் என்ற உத்தரவாதம்.
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. கண்டிப்பாக இல்லை... அப்படி இருந்து இருந்தால்,
      திருக்குறளை என் குரலாக மாற்றி எழுதி இருப்பேன்.. :)
      நம்பலாம் நண்பரே..!!!

      நீக்கு
  2. மன நிறைவே மிகவும் முக்கியம்...

    என்றும் தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுகல் ஐயா.. எங்கே ஆளை சிறிது நாட்களாக காணவில்லை.வருகைக்கு நன்றி...

      நீக்கு
  3. நண்பர் விசு,

    பாராட்டப்படவேண்டிய கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். இணையத்தில் எழுதுவதில் பல வசதிகள், இன்பங்கள் இருக்கின்றன. நாம் எழுதுவதை எடிட் செய்வது, இந்த முடிவு நல்லாயில்லை மாற்றுங்கள் என்பது, உங்கள் பதிவு பிரசுரத்திற்கு ஏற்றதாக இல்லை மன்னிக்கவும் என்று முகத்தில் அடிப்பது, அல்லது எதையுமே சொல்லாமல் மனதை உடைப்பது போன்ற அச்சு எழுத்தாளர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் இங்கே இல்லை. எனக்கும் இணையமே சிறந்தது என்ற எண்ணம் உண்டு. நீங்கள் சொன்னபடி எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். நம் ப்ளாக் நம் சுதந்திரம். இது ஒன்று போதாதா? காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் சொன்னது நினைவுக்கு வருகிறது. மேலும் நம் பதிவுக்கு நாம் சூட்டும் தலைப்பு மிக முக்கியம் என நான் கருதுகிறேன். குழந்தைக்குப் பெயர் வைப்பதைப்போல அது ஒரு ஆனந்த தருணம்.. பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைக்கு பெயர் வைப்பது போல்.. ஒவ்வொரு பதிவும் ஒரு குழைந்தை தானே காரிகன். எங்கே சில நாட்கள் "மிஸ்ஸிங் இன் அக்சன்". தங்களின் அடுத்த இசை பதிவிற்காக காத்து கொண்டு....

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. நாம் வாழும் நாட்டின் கலாச்சாரத்தை பற்றியும், பிள்ளைகளின் வளர்ப்பு முறை பற்றியும் மற்றும் பல காரியங்களையும் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லும் வாய்ப்பு.///

    ungalin 'enakku piditha vishayangal americavil' ezuthi vantha thodarin mulam pala thakavalkal america vai patri therinthu konden sir.

    blog patriya ungalin karuthum arumai sir.
    thodarnthu ezuthungal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மகேஷ் அவர்களே. என் பதிவுகளை தாம் படித்து பின்னூட்டம் அளித்து என்னை ஊக்கபடுத்துவதர்க்கு நன்றி.

      நீக்கு
  5. பதிவு எழுதுவதைப் பற்றி ஒரு பதிவா...? அசத்தல்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி மாது. இது பதிவு அல்ல நண்பா. தென் கலொபொர்னியாவை சார்ந்த தமிழ் சங்கத்தில் அவர்களின் தீபாவளி இதழுக்காக ஓர் கட்டுரை எழுதி தரும்படி கேட்டார்கள். அதற்காக நான் எழுதி கொடுத்தது தான் இது. அந்த இதழ் வெளிவரும் வரை இதை எங்கேயும் பதிவிடவில்லை. சென்ற வாரம் தோழி ஒருவர் அந்த இதழ் வெளிவந்து விட்டது என்றார். யாம் பெற்ற இன்பம் என்ற பாணியில் உடனே இங்கே இட்டு விட்டேன்.
      தொடர்ந்து வரவும்.

      நீக்கு
  6. சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. ம்ம்ம் சரிதான் எதை வேண்டுமானாலும் எழுதலாம் தான்....ஆனால் அதை எழுதும் விதத்தில் எழுதினால் ...தங்களைப் போல எழுதினால் யார்தான் வாசிக்க வர மாட்டார்கள்!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...