Tuesday, October 28, 2014

கருப்பு தான் எனக்கு பிடிச்ச ....

டாடி, நீங்க ரொம்ப லக்கி!

சந்தோசம் மகளே, இப்ப உனக்கு என்ன வேண்டும்?

எனக்கு ஒன்னும் வேண்டா டாடி. ஆனால் நீங்க ரொம்ப லக்கி.

என்ன சொல்ல வர?

நாளைக்கு நீங்க அஞ்சே முக்காலுக்கு எழ  வேண்டாம். ஆறரை மணிக்கு எழுந்தா போதும். 45 நிமிஷம் கூடுதலா தூங்கலாமே.

பள்ளிவயதில் கூட நான் இவ்வளவு ஒழுங்காக அதிகாலையில் எழுந்து பள்ளி கூடம் போனது இல்லை. ஆனால் நம் பிள்ளைகள் தாமதமாக போக கூடாது என்று நேரத்தில் எழுந்து போய் விடுவேன்.  இங்கே, பிள்ளைகள் தாமதமாக போனால் நிறைய பிரச்சனை; பெற்றோருக்கும் சேர்த்து. ஏன் மகளே, நாளைக்கு பள்ளி இல்லையா?

இருக்கு டாடி, ஆனால் நான் போக தேவையில்லை.

ஏன் மா?

டாடி, நாளைக்கு காலையில் என்னையும் சேர்த்து 40 பேர் நாங்க மாணவர் மாணவியர் எல்லாம் சில ஆசிரியர்களோடு சேர்ந்த இங்கே சற்று தொலைவில் உள்ள ஒரு நல்ல பல்கலை கழகத்திற்கு போக போகிறோம்.

ஏம்மா? நீங்க இப்ப படிக்கிறது 10வது. இவ்வளவு சீக்கிரம் ஏன் பல்கலை கழகம்.?

ஐயோ டாடி, நாங்க எழ தங்கி விட போகிறோம். சும்மா ஒரு நாளைக்கு தான்.

அங்க போய் என்ன செய்ய போகின்றீர்கள்?

இல்லை டாடி, ஒவ்வொரு பிள்ளையும் 10வது வகுப்பு சேர்ந்தவுடன், அந்த பிள்ளை ஒரு நல்ல பல்கலை கழகத்தை போய் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அங்கே என்ன நல்ல நல்ல விஷயங்கள் நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று  எங்கள் பள்ளியில் ஒரு விதிமுறை.

சரி மகளே, காலையில் என்ன எழுப்பிவிடு!

குட் நைட் டாடி.

குட் நைட்.

என்னிடம் விடை பெற்று கொண்டு அவள் போனவுடன், படுக்கைக்கு வந்தேன். அடே டே, என்ன ஒரு நல்ல விஷயம். 10வது படிக்கும் பிள்ளைகளை அருகில் உள்ள பல்கலை கழகத்திற்கு அழைத்து சென்று அங்கே உள்ள காரியங்களை காட்டி வருங்கின்றார்களே? என்ன ஓர் நல்ல செய்தி. அந்த பிள்ளைக்கு தான் என்ன ஒரு சந்தோசம். இன்னும் 4 வருடம் கழித்து செல்ல போகும் கல்லூரி எப்படி இருக்கும் என்று இப்போதே தெரிந்து கொள்கின்றார்களே. இதுவல்லவா முறை. யோசித்து கொண்டே நித்திரை அடைந்தேன்.,


(Picture courtesy : Google)

காலையில் .. .டாடி.. டாடி... கெட் அப்.

ஒரு அஞ்சு நிமிஷம் ராசாத்தி.

டாடி, நேரத்திற்கு போகாவிட்டால் ஸ்கூல் பஸ் போய் விடும். அப்படி போனால் நீங்கள் தான் என்னை 200 கிலோமீட்டர்  உங்கள் வண்டியில் அழைத்து செல்லவேண்டும்.

அய்யய்யோ, (இதை கேட்டவுடன் என் முகம்  பேய் அறைந்தது போல் ஆனது. அந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கின்றேன்.) இது என்ன அஞ்சு நிமிஷ தூக்கத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று யோசித்து கொண்டே அடித்து பிடித்து கிளம்பினேன்.  போகும் வழியில்.

டாடி, ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு எப்பவுமே எப்படா காலேஜ் போவம்ன்னு ஆவலா இருக்கு.

சந்தோசம் மகளே, ரெண்டரை மணிநேரம் பயணம், சாப்பாடு-குடிக்க தண்ணி எதாவது வேண்டுமா?

டாடி, நாங்க போகின்ற பஸ்ஸில் கழிவறை உட்பட எல்லா வசதியும் இருக்கு. இது ஓர் பிக்னிக் போல டாடி. 

பள்ளி கூடத்தை அடைந்தோம். அந்த பஸ் அங்கு காத்து கொண்டு இருந்தது.  மகளை வண்டியில் ஏற்றி விட்டு அது போகும் வரை பார்த்து கொண்டே இருந்து அது கண்ணில் இருந்து மறைந்தவுடன் வண்டியை எடுத்தேன். நேற்று தான் கை குழந்தையாக என் தோளில் அமர்ந்து இருந்தாள், இன்றோ கல்லூரி போகின்றேன் என்று சொல்லுகின்றாளே, நாட்கள் தான் எவ்வளவு சீக்கிரமாக போகின்றது.

நானும் கிளம்பி அலுவலகத்திற்கு சென்றேன். என் அலுவலகம் என் மகளின் பள்ளிக்கு அருகில் தான். பொதுவாக நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக கிளம்பி  (என் இளைய மகள் வேறொரு பள்ளியில் படிக்கின்றாள், அவள் என் மனைவியோடு பள்ளிக்கு போவாள்) செல்வோம்.

இங்கேயே வளர்ந்தாலும் என் பிள்ளைக்கு வீட்டில் செய்த உணவு தான் பிடிக்கும்.  இரவு உணவு முடித்த பின்னரே, மீதமுள்ள சாதம்-தோசை-சப்பாத்தி மற்றும் சாம்பார் எதையாவது எங்கள் இருவருக்கும் சேர்த்து கட்டி வைத்து விடுவாள். அடுத்தநாள் அவளை நான் பள்ளியில் விட்டு விட்டு என் அலுவலகம் செல்வேன். மதிய உணவு வேளையில், அலுவலகத்தில் உள்ள "மைக்ரோ வேவ் அவனில்" அந்த உணவை சூடு பண்ணி கொண்டு போய் அவளோடு எங்கள் காரிலேயே அமர்ந்து இருவரும் உண்போம். அது தான் வழக்கம். இன்று அவள் அருகில் இல்லையே என்று எண்ணி கொண்டே மதிய உணவை வெளியே முடித்து கொண்டேன்.

மாலை ஐந்து மணி போல், மகள் 5:30க்கு வந்து விடுவாளே என்று அலவலகத்தில் இருந்து கிளம்பி பள்ளி கூடம் சென்றேன். சரியான நேரத்திற்கு வந்தது.  என் மகளும் சரி, மற்ற பிள்ளைகளும் சரி, குதித்து இறங்கி ஓடி வந்தனர்.  அருகில் இருந்த மற்ற பெற்றோர்களுக்கு  போய் வருகின்றேன் என்று சொல்லி வண்டியை கிளப்பினேன். 

என்ன டாடி, கல்லூரி விளாகம் எவ்வளவு நன்றாக இருக்கின்றது? நீங்களும் இளங்கலை - முதுகலை என்று போனீர்கள் அல்லவா? ஏன் இந்நாள் வரை அந்நாட்களை பற்றி என்னிடம் சொல்லவே இல்லை.

மகளே, நீ பார்த்தது இந்நாட்டு கல்லூரி, நான் படித்தோ இந்தியாவில்.

என்ன டாடி. ஒவ்வொவொரு துறையாக போகும் போது என் கூட வந்த மாணவர்கள் எல்லாம் அந்த அந்த வகுப்பிலேயே அமர்ந்து விட்டார்கள்.

புரியலே மகளே,

இல்ல டாடி, நாங்கள் அங்கே போய் இறங்கியவுடனே அந்த கல்லூரியின் முதல்வர் வந்து எங்களை வரவேற்றார். எல்லா வகுப்பிலேயும் பாடங்கள் நடந்து கொண்டு இருப்பதால், நீங்கள் சத்தம் போட்டு பேச வேண்டாம் என்று சொல்லி, யார் யாருக்கு எந்த எந்த படிப்பு பிடிக்குமோ அந்த அந்த வகுப்பிற்கு சென்று அந்த பேராசிரியரிடம் உங்களை அறிமுக படுத்தி கொண்டு அந்த வகுப்பில் அமர்ந்து கொள்ளுங்கள்.  பிறகு அடுத்த வகுப்பிற்கு செல்லுங்கள் என்றார்.

அடே , கல்லூரி வகுப்பில் அமர்ந்து இருந்தீர்களா? வித்தியாசமாக இருந்து இருக்குமே?


ஆமா டாடி. பள்ளிக்கும் கல்லூரிக்கும் நிறைய  வித்தியாசம் டாடி." கான்ட்
வெயிட் டு  கோ டு காலேஜ்".

ஏன் டாடி நீங்க இந்தயாவில் பள்ளியில் படிக்கும் போது இந்த மாதிரி கல்லூரிக்கு எல்லாம் சென்றது இல்லையா டாடி?.

இல்ல மகள்,

சாரி டாடி, நீங்க நல்ல ஒரு நாளை உங்கள் பள்ளியில் மிஸ் பண்ணிடீங்க,

ஐ நோ!

ஏன் டாடி போகவில்லை.

அது ஒரு சொந்த கதை சோக கதை.

சொல்லுங்க.
மகள், இந்த மொத்த நாள் ஆனா செலவு எவ்வளவு இருக்கும்?

நிறைய டாடி. பஸ் - சாப்பாடு- ட்ரிங்க்ஸ்- இன்சுரன்ஸ்- பெட்ரோல்- ஆசிரியர் சம்பளம் அந்த மாதிரி நிறைய. இன்றைக்கு நாங்க 40 பேர் தான். இந்த மாதிரி குறைந்த பட்சம் 10 முறையாவது போகவேண்டும். ஏன் டாடி செலவ பத்தி கேக்குறிங்க? இந்தியாவில் இதுக்கு எல்லாம் பணம் இல்லையா?

பணம் எல்லாம் இருந்தது மகள். ஆனால், எங்கள் அறிவு கெட்ட பேராசை பிடித்த அரசியல்வாதிகள் - அதிகாரிகள்- தலைவர்கள் எல்லாரும் இந்த பணத்த எடுத்து வெளிநாட்டில் அவங்க கணக்கில் போட்டுடாங்க. இங்கே மக்களுக்கு செலவு செய்ய வேண்டிய பணம் எல்லாம் வருட கணக்கில் வெளிநாட்டில் கணக்கிலாமல் இருக்குது. அது தான்.

இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படியே இந்தியா இருக்க போகுது டாடி.?

என்று அவள் கேட்கும் போது வீடு வந்து சேர்ந்தேன். என் இரண்டாவது "மகள் கல்லூரி எப்படி இருந்தது" என்று கேட்டுகொண்டே வண்டியை நோக்கி ஓடி வந்தாள்.

இரவு மீண்டும் தூங்க போகையில் மீண்டும் யோசித்தேன். இன்னும் எவ்வளவு நாள் தான் இந்தியா இப்படியே இருக்க போகுது? இதற்கு விடிவு காலமே இல்லையா என்று யோசிக்கையில் தூக்கம் வர மறுத்தது. கழுதை கெட்டால் குட்டி சுவர் ஆயிற்றே? நேராக வந்து இணைய தளத்தில் நம்ம ஊரில் என்ன நடக்கின்றது என்று பார்த்தேன்.

செய்தி " கருப்பு பணம் வைத்து உள்ளவர்களின் பெயர்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது" அடே, இதை ஏன் சுப்ரீம் கோர்ட் அறிவிக்க வேண்டு, மோடியும் பாபாவும் சேர்ந்து 100 நாட்களில் இந்த கதைக்கு முற்று புள்ளி வைப்போம் என்றார்களே, இப்ப சுப்ரீம் கோர்ட் ஆணையிடும் வரை ஏன் தாமதித்தார்கள் என்று யோசித்து கொண்டே அடுத்த செய்திக்கு போனேன்.

 கருப்பு பணத்தை வைத்து இருந்த மூவர் பெயர் வெளியிட பட்டுள்ளது. இந்த மூவரில்ஒருவர் சென்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 65 லட்சமும் BJP க்கு 1 கோடியே 15 லட்சமும் கொடுத்து இருகின்றார் என்று போட்டு இருந்தது.

அட பாவிங்களா, நிச்சயமா இந்தியாவிற்கு விடிவுகாலம் வருவது சந்தேகம் என்று அடுத்த நாள் காலையில் 5:30க்கு எழ வேண்டுமே என்று துக்கத்தோடு தூங்க போனேன். 

பின் குறிப்பு ;
அடுத்த நாள் காலையில் பள்ளி கூடம் செல்லும் போது.
.
ஏன் மகளே, நீ இந்த கல்லூரிக்கு தான் போகவேண்டும் என்று ஆசை படுகின்றாயா?

நல்லா தான் இருக்கு டாடி, இருந்தாலும் நான் இங்கே போகவில்லை.

ஏன்டி ராஜாத்தி?

இந்த கல்லூரியில் கோல்ப் (  Golf Team Program ) அணி இல்ல டாடி. ஐ ஆல்வேஸ் வான்டட் டு ப்ளே "கோல்ப்" பார் மை காலஜ் டீம்.


மனதில் பேரு மூச்சு விட்டேன். இந்த கல்லூரியில் கோல்ப் அணி இல்லை என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். ஒரு வேலை மகளுக்கு இந்த கல்லூரி பிடித்து விட்டால்....?  

6 comments:

 1. சரிதான் நண்பரே! தங்கள் சோகம்...ம்ம்ம் இங்கு கல்லூரிகள் என்னத்தக் கிழிக்கின்றார்கள்! பள்ளியிலும் சரி, கல்லூரிகளிலும் சரி சந்தேகம் கேட்டால், டீச்சர், "இந்தப் பாரு இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது...இதெல்லாம் அப்புறம் படிப்ப...இப்ப உனக்கு அவசியம் இல்லை" என்று கேள்வி கேட்பதே தவறு என்று வெறும் ஏட்டுப் படிப்புதான்...அஹ்டை அப்படியே வாமிட் செய்ய வேண்டும் பரீட்சையில்....ம்ம்ம்

  மிக நல்ல ஒரு விஷயம் அங்கு பள்ளிகளில் அவர்கள் செய்வது! மாணவ, மாணவிகளுக்கு கல்லுர்ரியில் படிக்கும் ஒரு ஆர்வம் எழும்....நல்ல ஹெல்தி விஷயம்...

  இப்படி எல்லாம் இருப்பதால் தான் அந்த ஊர்கள் உலகில் அம்ர்ந்திருக்கும் இடம் வேறாகி உள்ளது.....நம்ம நாடு?!!?!! தங்கள் நாற்காலிகள் கைவிட்டுப் போய்விடக் கூடாது என்று யோசித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் அரசியல் வாதிகள்...இருக்கும் போது சொத்து சேர்க்கவும் மண்டையை குடைந்து கொண்டிருக்கின்றார்கள்...என்னத்தச் சொல்ல...

  ReplyDelete
 2. நீங்க அங்கிருந்து பெரு மூச்சு விடறீங்க... நாங்க கண்ணெதிரில் பார்த்து பெரும் மூச்சு விட மட்டும்தான் முடிகிறது... என்ன செய்ய?

  ReplyDelete
 3. அமெரிக்க கல்வி முறையையும் நமது கல்வி முறையையும் நினைத்து ஏங்கத்தான் இப்போது முடியும். சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 4. பள்ளிப் பருவத்திலேயே பல்கலைக் கழகத்தில் ஓர் நாள்
  கொடுத்து வைத்தவர்தான் தங்கள் மகள்
  நமது நாட்டை நினைத்தால் பெருமூச்சுதான் வருகிறது நண்பரே

  ReplyDelete
 5. சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...