Thursday, August 7, 2014

என்னை ஏமாற்றிய எழுத்தாளர் சுஜாதா...


சிட்னி ஷேல்டனின் தீவிர ரசிகனாகிய நான்,  என் நண்பன் ஒருவனால் எழுத்தாளர் சுஜாதாவிற்கு அறிமுகபடுத்த பட்டேன். ஷேல்டனின் புத்தகத்தில் மூழ்கி கிடந்த என்னை பார்த்த என் நண்பன், இவ்வளவு உற்சாகமாக இந்த நாவலை படிக்கின்றாயே, நம்ம ஊர் எழுத்தாளர் சுஜாதவை தெரியுமா என்றார். நான் அதற்கு பதிலாக, தெரியாது, அப்படியே தெரிந்தாலும், நான் பெண் கதாசிரியர் புத்தகங்களை அவ்வளவாக விரும்பி படிப்பதில்லை என்றேன்.அதற்கு அவன், நீ என்ன பெண்களுக்கு எதிரியா என்றான். இல்ல நண்பா, நான் ஆங்கில நாவல்களை விரும்பி படிப்பவன், அதில் "டேனியல்லே ஸ்டீல்" என்ற மிகவும் புகழ் வாய்ந்த ஒரு பெண் கதாசிரியர் உண்டு. அவர்கள் புத்தகங்கள் இரண்டு படித்து நொந்து விட்டேன் என்றேன். ஏன் அந்த புத்தகங்கள் அவ்வளவு மோசமா என்றான். இல்லை, இல்லை, அவை ரெண்டுமே மிகவும் வெற்றி பெற்ற நாவல்கள், ஆனால், அந்த கதைகள் எல்லாமே ஒரு தீவிரமாக போகாது. கதையின் முடிவை இரணடாவது அத்தியாயத்திலே யூகித்து விடலாம் என்றேன். அதுமட்டும் அல்லாமல் பெண் எழுத்தார்கள் கதையில் நிறைய "டிராமாக்கள்' உண்டு. நமக்கு பிடித்தது "அக்ட்சன்' என்றேன்.

சரி,  எனக்கு அவர்களை பற்றி தெரியாது, ஆனால், நீ நம் தமிழ் எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை கண்டிப்பாக படி, உனக்கு பிடிக்கும் என்றான். நான் தான் சொன்னேனே, எனக்கு பெண் எழுத்தார்களின் புத்தகத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லை என்று, என்னை வற்புறுத்தாதே என்றேன். அட பாவி, இவர் பெயர் தான் சுஜாதா, ஆனால் இவர் ஒரு ஆண் எழுத்தாளர் தான் என்றான். அதுமட்டும்  இல்லாமல் "பிரிவோம் - சிந்திப்போம்" என்ற நாவலையும் படிக்க சொல்லி கிளம்பினான்.

ஒரு விருப்பம் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் முடியவில்லை. நானே அந்த கதையின் நாயகன் ஆகிவிட்டேன். என்ன ஒரு திறமை. ஒரு வாசகனை இழுத்து சென்று அந்த கதையில் சேர்த்து விட்டு, "அவன் வேறு, நீ வேறு அல்ல, நீங்கள் இருவரும் ஒன்று தான்" என்று கட்டி போட்டு விட்டார்.

கையில் வெண்ணையை வைத்து கொண்டு, நெய்யை தேடி அலைந்தேனே...என்று என்னை நானே நொந்து கொண்டேன்.
நண்பன் மீண்டும் வந்தான், அவனிடம் கைகூப்பி நன்றி கூறினேன். பின் அவன்... சுஜாதாவின் " கணேஷ்-வசந்த்" கதைகளை படி என்றான். அவன் சொன்ன படியே படிக்க ஆரம்பித்தேன். அருமையான நாவல்கள். அட்டகாசமான தேர்ந்த எழுத்துக்கள். சுஜாதாவின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்.
சரி, இப்போது தலைப்பிற்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றீர்களா? பொறுமை.

இந்த கதைகளில் சுஜாதா, அடிக்கடி, "மெக்ஸிகோ நாட்டு சலவைகாரி ஜோக்" என்று சொல்லுவார், ஆனால் அந்த ஜோக் என்ன வென்று சொல்லமாட்டார். அது என்னவாய் இருக்கும் என்று யோசித்து மண்டை காய்ந்தவன் நான். அந்த ஜோக் இதுதான் என்று பலர் பல கதைகளை கூறினாலும், அது என்னவோ எனக்கு சரியாக படவில்லை. நான் ஒரு முறை அவருக்கே கடிதம் எழுதி கேட்டு விட்டேன், பதிலுக்கு நேரம் வரும் போது சொல்கிறேன் என்றார். ஆனால் அந்த நேரம் வரவில்லை.

சரி, விஷயத்திற்கு வருவோம். நேற்று இங்கே என்னோடு பணிபுரியும் "மெக்சிகன்" ஒருவர் என்னை மதிய உணவிற்கு அழைத்து சென்றார். போகும் வழியிலேயே அவர், உனக்கு சுவையற்ற 5 நட்சத்திர உணவு  பிடிக்குமா இல்லை சாதாரண இடத்தில சுவைமிகுந்த உணவு பிடிக்குமா என்று ஒரு கேள்வியை போட்டார்.

முனியாண்டி விலாசில் தின்று கெட்டவன் ஆயிற்றே... சுவை தான் முக்கியம் என்று சொன்னேன். ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார். அருகில் அமர்ந்து இருந்தவர்களின் தட்டை நோட்டம் விட்டேன். மெக்சிக்கன் உணவும் கிட்ட தட்ட நம் உணவு போல் தான் இருகின்றது.  என்ன சாப்பிடுகின்றாய் என்ற கேள்விக்கு, இது உங்கள் இடம் நீங்களே சொல்லுங்கள் என்றேன். கோழியும், இறாலும் சேர்ந்த ஒரு உணவு இருக்கிறது, அதை சாப்பிடு என்று சொன்னார். அடடே.. பழம் நழுவி பாலில் விழுந்தது என்று கேள்வி பட்டுள்ளேன், இது என்ன கோழி நழுவி இறாலில் விழுந்த கதை என்று நினைத்து ஓகே என்றேன்.ஒரு "கடாயில்" புகை வர அதை பரிமாறினார்கள். சாப்பிட ஆரம்பித்தேன். அங்கே இருந்த தொலை காட்சியில் ஒரு கால்பந்து போட்டி போய் கொண்டு இருந்தது. தமிழனுக்கு தான் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்க முடியாதே.. என்ன நண்பா, உலக கால்பந்து போட்டியில் மெக்சிகோ, நெதர்லாந்திடம் தோற்று விட்டதே என்றேன். ஆமாம் என்ற அவன்... பதிலுக்கு "அது இருக்கட்டும், இந்தியா ஏன் கால்பந்து ஆடுவது இல்லை என்றான்".  அவன் இப்படி கேட்டவுடன் என் முகம் பேய் அறைந்ததை போல் ஆகிவிட்டது ( பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்)அய்யய்யோ.. சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டோமே என்று வருந்தி.. அதற்கான காரணத்தை அவனுக்கு விளக்கினேன். 

உங்களில் சில பேர்,....இருக்கட்டும்.. இருக்கட்டும்.. இன்னும் தலைப்பிற்கு வரவில்லையே என்று சொல்லுகிறீர்கள், இதோ வருகிறேன். அவனிடம் பேசி கொண்டு இருக்கும் போது, திடீரென்று சுஜாதாவின் "மெக்சிகோ நாட்டு சலவைகாரி" நினைவில் வந்தாள். அவனிடம் மெதுவாக, சுஜாதா வை பற்றியும் அவரின் கதையை பற்றியும் விளக்கி விட்டு, இந்த "உங்கள் நாடு சலவை காரி" ஜோக்கை எனக்கு சொல்ல முடியுமா என்றேன். பதிலுக்கு அவன் குலுங்கி குலுங்கி சிரித்து விட்டான். அவன் சிரிப்பை முடித்தவுடன், சரி அந்த விஷயத்தை சொல்  என்றேன்.

அது ஒன்னும்  இல்ல, எங்க ஊரில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்யும் பொது... "என்ன இந்திய நாட்டு மீன்காரி மாதிரி பண்ணுற" என்று கேட்போம். அதை அறிந்து  கொண்ட உங்கள் எழுத்தாளார் எங்களை இந்த மாதிரி கிண்டல் பண்ணதான் இந்த மாதிரி எழுதி இருக்கார் என்றான். அது சரி, நண்பா... அந்த "இந்திய நாட்டு மீன்காரி" ஜோக்கையாவது சொல்லு என்றேன், அதற்க்கு, நீதானே இந்தியன்... நீதான் எனக்கு சொல்லவேண்டும் என்றான். 

ஏமாற்றிவிட்டாரே சுஜாதா...

சரி.. மெக்சிகோ நாட்டு சலவை காரி ஜோக் தான் சொல்லாமால் சுஜாதா போய் விட்டார். உங்களில் யாருக்காவது இந்த "இந்திய நாட்டு மீன்காரி ஜோக்" தெரிந்தால் சொல்லுங்களேன்..


5 comments:

 1. கடைசி வரி வரைக்கும் நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்களே விசு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி.

   Delete
 2. Sujatha is a fantastic writer. I think he was ahead of time. Have you read Srirangathu Devadaigal ? That is a great book too. I first read his novel 'Vibareetha kotpadugal' in 1980 I think. and have been hooked every since. I dont think there was a Mexican salavaikari joke. he used to write that, just like you write 'Peyaraindha kadhai' ! Sujatha

  ReplyDelete
 3. ஆகா
  அதுபோன்று ஒரு ஜோக்கே கிடையாது என்று சுஜாதா எழுதியதாக நினைவு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி.

   Delete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...