சனி, 5 ஜூலை, 2014

செலவு எட்டணா... வரவு எப்படியண்ணா?

சென்ற இடுகையின் தொடர்ச்சி...

பனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை !



அது சரி.. இப்ப இவன் 'நோ தங்கமணி என்சாய்னு' சொல்லிட்டான் இல்ல. இவன் ஆசையை நம்ப நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு நப்பாசை. இந்த போனை பேசி முடித்தவுடன் நேராக எனக்கு பிடித்த "பாஸ்ட் பூட்' உணவகத்திற்கு வண்டியை செலுத்தினேன். மனதில் ஒரு உளைச்சல்.
"நாங்க ஊருக்கு போன உடனே, காஞ்ச மாடு கம்ப கொல்லையில் நுழைஞ்ச மாதிரி கண்ட இடத்தில போய்  சாப்பிட்டு உடம்பை கெடுத்து வைக்காதீர்கள்" என்ற சத்தம் "அசரீரீ" போல் எதிர் ஒளியோடு கேட்டது.


அதை அசட்டை பண்ணி எனக்கு பிடித்த (மனைவிக்கு பிடிக்காத) ஒன்றை கேட்டு பெற்று கொண்டு கூடவே ஒரு பெப்சி (இந்த பெப்சி உங்களுக்கு விஷம் போல, அதை கண்டாலே  பாம்பை பார்த்தது போல் ஒரு 10 அடி தள்ளியே நில்லுங்க) வாங்கி கொண்டு வண்டியை ஒட்டி கொண்டே (ஏங்க.. செய்வன திருந்த செய். ஒன்னு சாப்பிட்டு வண்டிய ஓட்டுங்க, இல்ல வண்டியை நிறுத்திட்டு  சாப்பிடுங்க என்ற அசரீரீயையும் அசட்டை பண்ணி ) சாப்பிட ஆரம்பித்தேன்.

இங்க நல்லா படிச்ச நாலு ஆண்மகன்கள் , மவனே அம்மணி வந்தவுடன் கிரெடிட் கார்ட் கணக்கை பார்த்தவுடன் நீ மாட்டினே என்று மனதிற்குள் சந்தோஷ படுவது தெரியுது. இவ்வளவு யோசிக்கிறவன் அதை கவனிக்காம விட்டு விடுவேனா?
அந்த இடத்தில நான் கார்ட் கொடுக்கவில்லை. ரொக்கமா 20 $ தாள் தான் கொடுத்தேன்.

என்ன இது...? திருமணம் ஆனவனிடம் 20 டாலரா? இது சாத்தியமே இல்லை என்று அடித்து கூறும் பெண் வாசகர்கள் அடுத்த சில வாக்கியங்களை தவிர்ப்பது நல்லது.

திருமணம் ஆனா ஒவ்வொரு ஆணிடமும் ஒரு "ரகசிய புதையல்'உண்டு. இந்த ரகசிய புதையலில் ஒவ்வொரு ஆணும் நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் போல சிறு சிறு தொகையாக சேர்த்து வருவான். இது பொதுவாக அலுவலகத்தில் மறைத்து வைக்க பட்டு இருக்கலாம், சில் நேரங்களில் வாகனத்து பின் புறத்தில் மறைத்து வைக்க பட்டு இருக்கலாம்,இல்லை, வீட்டிலேயே அந்த ஓரத்தில் தொங்கி கொண்டு உள்ளதே, அந்த "கல்யாண கோட்" அதன் பாக்கெட்டில் இருக்கலாம்.  இந்த புதையலில் பொதுவாக 1 முதல் 20 டாலர் நோட்டுகளை பார்க்கலாம். அதற்க்கும் மேலான பெரிய நோட்டுக்களை இங்கே பார்க்க முடியாது.
இப்போது இந்த புதையலுக்கு எங்கே எப்படி பணம் வருகிறது என்று பார்ப்போம்.

சில ஆண்கள் மிகவும் புத்திசாலிகள். வருமுன் காப்போம் என்பதுதான் இவர்கள் வழி. பொண்ணு  பார்க்க போகும் போதே - அல்ல திருமணம் ஆகியவுடனேயே மனைவியிடம் தன சம்பளத்தில் ஒரு 250-500 டாலர்களை குறைத்தே சொல்லிவிடுவார்கள்.இந்த தொகையை அலுவலகத்தில் ரொக்கமாக பெற்று அதை அங்கேயே வைத்து விடுவார்கள். மீதியை காசோலையாக வாங்கி நேராக மனைவியிடம் கொடுத்து அவளிடம் நல்ல பெயர் வாங்கி கொள்வார்கள். இந்த மாதிரி மனைவிகள் அவர்தம் கணவர்களை மிகவும் பாராட்டி பேசுவார்கள். அவர்கள் அப்படி பேசும் போது இவர்கள் முகத்தில் அசடு வழியும். மற்றும் சில கணவர்கள் பெட்ரோல் போடும் போது பாதி டேன்க் நிரப்பி விட்டு மீதியை "CASHBACK"  வாங்கி கொள்வார்கள். அதையும் தாண்டி சில பேர் காய் கரி வாங்குகையில் 5-10 என்று சுட்டு வைத்து கொள்வார்கள். இவ்வாறாக குருவி கூடு கட்டுவது போல் சேர்த்து வைப்பது தான் "ரகசிய புதையல்"

இந்த ரகசிய புதையலில் இருந்து தான் ஒரு 20 எடுத்து அங்கே கொடுத்தேன். அதனால் நான் இங்கே வந்தேன் என்று யாருக்கும் தெரியாது என்று ஒரு அசட்டு தைரியத்தில் சத்தமாக பாட்டை (நீங்க என்ன செவிடா? இவ்வளவு சத்தம் தேவையா? என்று மற்றுமொரு அசரீரீ) போட்டு கொண்டே வண்டியை வீட்டை நோக்கி விட்டேன்.

வீட்டிற்க்குள் நுழையும் போதே, வயிரு ஒரு  மாதிரி கலக்க ஆரம்பித்தது. ஒருவேளை பழைய எண்ணையில் அவன் வறுத்து இருப்பானோ? அதனால் தான் வெளிய எங்கேயும் சாப்பிடாதே என்று மனைவி சொல்லி இருப்பார்களோ என்று ஒரு குற்ற உணர்வு மனதில் வந்தது. அது ஒன்றும் அப்படி இருக்காது என்று எனக்கே நான் ஒரு ஆறுதல் சொல்லி கொண்டு இருக்கையில் தொலை பேசி அலறியது...

தொடரும்...

தண்டமா போன "தண்டபாணி"




2 கருத்துகள்:

  1. ரகசிய புதையலை தொடங்கலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறேன்...[!]

    பதிலளிநீக்கு
  2. ஏன் எனக்கு மட்டும் எந்த ரகசியமும் வொர்க் அவுட் ஆகமாட்டேங்குதுன்னு
    தெரியலை

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...